X

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – இந்திய அணிக்கு 261 வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூசிலாந்து

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

8 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் உலக கோப்பை போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் “ரவுண்டு ராபின்” முறையில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

நேற்றுடன் 7 ஆட்டங்கள் முடிந்துள்ளன. ஆஸ்திரேலியா , வெஸ்ட் இண்டீஸ் 2 வெற்றியுடன் தலா 4 புள்ளிகளும், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றியுடன் தலா 2 புள்ளிகளும் பெற்றுள்ளன.

நியூசிலாந்து ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. இங்கிலாந்து , வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் 2 தோல்வியுடன் புள்ளி எதுவும் பெறவில்லை.

8-வது லீக் ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடந்தது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின.

இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். 9 ரன்னில் நியூசிலாந்தின் முதல் விக்கெட் விழுந்தது. பேட்ஸ் 5 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

கேப்டன் சோபிடேவின் 35 ரன்னில் வெளியேறினார். அவரது விக்கெட்டை பூஜா கைப்பற்றினார். அப்போது நியூசிலாந்து ஸ்கோர் 54ஆக இருந்தது.

3-வது வரிசையில் களம் இறங்கிய அமேலியா கெர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். அவர் 63 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 50 ரன்னை தொட்டார். அவர் 50 ரன்னில் ராஜேஸ்வரி கெய்க்வாட் பந்தில் ஆட்டம் இழந்தார். எமி சாட்டர்த்வைட் 75 ரன்கள் எடுத்து பூஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 10 ஓவர் வீசி 34 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக ஒரு ரன் அவுட் முறையில் ஒருவரை வீழ்த்தினார்.