9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் அவுட் ஆனார்.
இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. நேபாளம் சீதா ரானா மகர் இரண்டு விக்கெட்டுகளையும், கபிதா ஜோஷி ஒரு விக்கெட் வீழ்த்தினார். 179 ரன்களை துரத்திய நேபாளம் அணி துவக்கத்திலேயே தடுமாறியது.
அந்த அணியின் சம்ஜனா கட்கா 7 ரன்னில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய சீதா ரானா மகர் 18 ரன்களை அடித்தார். அடுத்து வந்தவர்களில், கேப்டன் இந்து பர்மா 14 ரன்களையும், ருபினா சேத்ரி 15 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். இடையில் பிந்து ராவல் நிதானமாக ஆடி 17 ரன்களை அடித்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.