Tamilசெய்திகள்

மகரிஷி வால்மீகி மாநகராட்சி மோசடி – காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பெங்களூர் வசந்த்நகரில் கர்நாடகா மகரிஷி வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் செயல்படுகிறது. இந்த கழகத்தின் அக்கவுண்ட் சூப்பிரண்டு சந்திரசேகரன் (வயது 52) என்பவர் கடந்த மே மாதம் 26-ந்தேதி ஷிமோகாவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் மாநகராட்சி வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு இருந்த கர்நாடக வால்மீகி வளர்ச்சிக்கழகத்தின் நிதி தொகை ரூ.94.97 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதறை, பழங்குடியினர் நலத்துறை மந்திரியாக இருந்த நாகேந்திரன் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த ஊழல் வழக்கை கர்நாடக மாநில அரசு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

ரூ.94.97 கோடி பணம் ஐதராபாத்தை சேர்ந்த முதல் நிதிக் கடன் கூட்டுறவு சங்கத்தின் வங்கி கணக்குகளுக்கு மாநகராட்சி கணக்கில் இருந்து முறைகேடாக மாற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றி பணத்தை எடுத்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இந்த கணக்கில் இருந்து சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்த வழக்கில் இதுவரை 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் முறைகேடு செய்த பணத்தில் வாங்கிய தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரன் மற்றும் ராய்ச்சூர் ஊரக சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், மாநில மகரிஷி வால்மீகி நிகாம் தலைவருமான பசனகவுடா தாடால் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பண பரிமாற்ற வழக்கில் இருவரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக கடந்த 5-ந்தேதி நோட்டீசு அனுப்பிய சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆஜரான நாகேந்திரன், பசனகவுடா தாடால் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தலைவர் மணீஷ் கர்பிகர் தலைமையில் விசாரணை நடத்தி பல்வேறு கேள்விகள் கேட்டு வாக்குமூலம் பதிவு செய்தனர். இருவரின் வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சார்பாக ஆஷாபூர் சாலை 2-வது வார்டு ராம் ரஹீம் காலனியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. 3 அதிகாரிகள் தலைமையில் 2 குழுக்கள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பசனகவுடா தாடாவிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.