முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் மகாராஷ்டிர மாநிலத்திலும், முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறும் அரியானா மாநிலத்திலும் கடந்த 21-ந்தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் 61.13 சதவீத வாக்குகளும், 90 இடங்களைக் கொண்ட அரியானாவில் 68 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.
இந்த இரண்டு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையின் துவக்கத்தில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்க தேவையான 145 இடங்களைவிட அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 185 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. காங்கிரஸ் கூட்டணி 88 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 15 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. எனவே, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அரியானாவைப் பொருத்தவரை, துவக்கத்தில் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றாலும், நேரம் செல்லச்செல்ல காங்கிரஸ் கூட்டணியின் முன்னிலை நிலவரம் அதிகரித்தது. 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 45 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 15 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. இந்த முன்னிலையில் மாற்றம் ஏற்படலாம்.
இதே நிலை நீடிக்கும்பட்சத்தில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.