மகராஷ்டிரா அரசு தொடர்பான வழக்கு! – உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அரசு அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.
இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அஜித் பவாரின் முடிவு கட்சியின் முடிவு அல்ல என்றும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடனடியாக உடனடியாக விளக்கம் அளித்தார். அத்துடன் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையின்போது, குதிரைப்பேரம் நடப்பதை தவிர்க்கிற வகையில் உடனடியாக தேவேந்திர பட்னாவிஸ் அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சிறந்த வழி, சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதுதான் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை’ என கருத்து தெரிவித்தனர்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மத்திய அரசுக்கு ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்து கவர்னர் எழுதிய கடிதத்தையும், தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சியமைக்க வருமாறு பட்னாவிசுக்கு ஆளுநர் அனுப்பிய அழைப்பு கடிதம், மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் அளித்த, எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் உள்ளிட்ட விவரங்கள் சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து விசாரணை தொடங்கியது. உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்ற வழக்குதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது ஆளுநரின் செயலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, ஆளுநர் முடிவில் நீதிமன்றங்கள் தலையிடவே முடியாது என்றார். ஆளுநரை விரைவாக வேலை செய்ய சொல்லவோ அவரை அவசரப்படுத்தவோ முடியாது என்றும் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிர பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி வாதாடும்போது, முழு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருப்பதாகவும், பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கண்ணா, பெரும்பான்மை இருக்கிறது என்றால் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி நிரூபிக்கலாமே? என கேள்வி எழுப்பினார்.
சிவசேனா சார்பில் ஆஜரலான வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, ஜனாதிபதி ஆட்சியை நீக்குவதற்கு, இது என்ன தேசிய அவசர நிலை பிரகடனமா? என்றார். நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு பட்னாவிஸ் அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடும்போது, கட்சி பேதமின்றி சட்டசபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக நியமித்து, நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் தேசியவாத காங்கிரஸ் தோற்றாலும் மகிழ்ச்சியே, ஆனால் வாக்கெடுப்புக்கு பாஜக முன்வரவில்லை என்றும் சிங்வி கூறினார்.
தொடர்ந்து வாதாடிய முகுல் ரோகத்கி, மகாராஷ்டிர சட்டசபையில் பட்னாவிஸ் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் ஆளுநர் அவகாசம் அளித்திருப்பதாக கூறினார். அதை 3 அல்லது 4 நாட்களாக குறைக்க முடியாது என்றும், இன்றோ நாளையோ வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கூடாது என்றும் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர்.