Tamilசெய்திகள்

மகராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைந்தது – அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 4 தொகுதிகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மூன்று கட்சிகளும் மக்களவை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்தன. 48 தொகுதிகளை பிரித்துக் கொள்ளவது தொடர்பாக மூன்று கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலவியது.

இதனால் சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை மந்திரியான அமித் ஷா தலையிட்டு இரண்டு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராமதி, ரெய்க்கார், ஷிருர், பார்பனி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு 13 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 31 இடங்களில் போட்டியிடுகிறது. பாராமதி தொகுதி பவார் குடும்பத்தின் கோட்டையாக விளங்குகிறது. தற்போது சரத் பவார்- அஜித் பவார் குடும்ப உறுப்பினர்கள் இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே பாராமதி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவர் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.