Tamilசெய்திகள்

மகராஷ்டிராவில் சரத் பவாரை சந்திக்கும் மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இரண்டு நாட்கள் பயணமாக மகாராஷ்டிர மாநிலம் சென்றுள்ளார். மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கு எதிராக எதிர்கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சியில் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு முயற்சியாக மும்பையில் நேற்று, சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆதித்யா தாக்ரே மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க மம்தா திட்டமிட்டிருந்தார். தற்போது அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகன் ஆதித்யா மற்றும் சஞ்சய் ராவத் ஆகியோரை மம்தா சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது மம்தாவுக்கு உத்தவ் தாக்கரேவின் புகைப்படங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றையும் ஆதித்யா பரிசளித்தார். முன்னதாக மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு மம்தா சென்றார்.

மேலும், கடந்த 2008 ஆண்டு நிகழ்ந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு உயிரிழந்த காவலர் துக்காராம் நினைவிடத்திலும் மம்தா அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக இன்று அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்திக்கிறார்.