மகனுக்காக தேனி தொகுதியில் ரூ.1000 கோடி செலவு செய்யும் பன்னீர் செல்வம் – தங்கதமிழ்ச் செல்வன் புகார்
தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அரசியல் பக்குவம் இல்லாமல் பேசி வருகிறார். எங்களை பார்த்து சுயேட்சை வேட்பாளர் என்கிறார். தேர்தல் முடிவில் இதற்கு தக்க பதிலடி தருவோம்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனதுமகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரூ.1000 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பணம் பாதாளம் வரை பாய உள்ளது. அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் ஓட்டுகளை மட்டும் எங்களுக்கு போடுங்கள்.
இந்த தேர்தல் அ.தி.மு.க.வுக்கு முடிவு கட்டும் தேர்தலாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எங்களுக்கு புதிதாக வழங்கிய சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். எனவே எங்களுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.வினர் பணம் கொடுப்பதை தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கின்றனர். ஆனால் மற்ற வேட்பாளர்களை மிரட்டி வருகின்றனர். இந்த தேர்தல் விதிமீறல் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். தேனி பாராளுமன்ற தொகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க.வே அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.