ப.சிதம்பரம் கைதுக்கும் பா.ஜ.க-வுக்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த கைது நடவடிக்கை தொடர்பாக ஆளும் பா.ஜனதா மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே, ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்துவதாக மத்திய அரசு மீதும், பா.ஜனதா மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.
இதை ஏற்கனவே பா.ஜனதா மறுத்திருந்த நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் நேற்று மறுத்து உள்ளார். கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டு எதிர்பார்த்த ஒன்றுதான். அந்த கட்சி இந்த நாட்டை பல ஆண்டுகள் ஆண்டிருக்கிறது. அப்போது காங்கிரஸ் வேண்டுமானால் சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை தவறாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் பா.ஜனதா அப்படி செய்யாது. ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
நீதித்துறை மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். ஒரு தேசிய கட்சியான காங்கிரசிடம் இருந்து இப்படியான குற்றச்சாட்டு வந்திருக்கக்கூடாது. அவர்கள் எவ்வளவு விரக்தியில் உள்ளார்கள்? என்பதையே இது காட்டுகிறது.
ஒரு வழக்கில் தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சரியான வழியை காட்டவில்லை. அவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.