முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் உரிமைகளை திரும்ப கிடைக்கச்செய்வதற்கும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நரேந்திர மோடி அரசின் தன்னிச்சையான, அரசியல் சாசனத்துக்கு எதிரான முடிவை திரும்பப்பெறவும் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் நிற்கிறது” என்று கூறி இருந்தார்.
இதற்கு காஷ்மீர் யூனியன் பிரதேச பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா பதிலடி கொடுத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.யுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ்காரர்கள் எப்போதும் நாட்டின் முதுகில் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
ப.சிதம்பரம், திக்விஜய்சிங் போன்றவர்கள் நாட்டுக்கு எதிராக பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவரது மகன் ராகுலும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ப.சிதம்பரம் மீதான பா.ஜ.க. தலைவரின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.