தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நான் சம்பந்தப்படாத, நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழ் அறிவிப்புகளிலோ, சுவரொட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தைக் கழகத்தினர் யாரும் பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், கழகத் தலைவர் போன்ற நம் முன்னோடிகளின் புகைப் படங்கள்தான் இடம்பெற வேண்டும்.
கலைஞர் என்பவர் ஒரே ஒருவர்தான். அப்படியொரு பன்முகத்தன்மை கொண்ட ஆளுமைக்கு நிகராக வேறொரு வரை நம்மால் காட்டிட முடியுமா? உண்மை இப்படியிருக்கையில் என் பெயருக்கு முன்னால், ‘மூன்றாம் கலைஞர், திராவிடக் கலைஞர், திராவிடத் தளபதி, இளம் தலைவர்’ என்பன போன்ற பட்டப் பெயர்கள் இடுவதை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. இப்படி பட்டப் பெயரிட்டு அழைப்பதால், நாளையில் இருந்து நான் என்ன கலைஞராகி விடப் போகிறேனா? கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே, நம் தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே.
இனி, இது போன்ற தர்மசங்கடங்களுக்கு என்னை ஆளாக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். நான், ‘உங்களில் ஒருவனாக, உங்களின் மனதுக்கு நெருக்கமான, உதயநிதியாகவே எப்போதும் இருக்க விரும்புகிறேன். அதனால் தயவு செய்து பட்டப் பெயர்களைத் தவிர்க்க வேண்டும்.
இதேபோல நான் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பட்டாசு வெடிப்பதையும் நிறுத்த வேண்டும். என் வருகையை மக்களுக்கு உணர்த்தும் வகையில் செலவு செய்தே ஆக வேண்டும் என நீங்கள் நினைத்தால், பட்டாசு வாங்க ஆகும் பணத்தை என் முன்னிலையில் ஏழை எளிய மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கொடுத்து உதவுங்கள். அதுவே நம் மனதுக்கு நிறைவான கொண் டாட்டமாக அமையும்.
மேலும் கழகக் கொடி கட்டுவதைக் கூட காவல் துறையின் அனுமதி பெற்று மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.
பிளக்ஸ் பேனர்களை அறவே தவிர்க்கவும் என்ற நம் கழகத் தலைவரின் அறிவுறுத்தலை கடைக் கோடித் தொண்டர்கள் வரை கட்டளையாக ஏற்றுக் கடைப்பிடிப்பதை நினைத்து பெருமை அடையும் நான் மேற்கண்ட என் வேண்டு கோள்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன்.
சமூகநீதியை, இனத்தை, பண்பாட்டை, மொழியைக் காக்க வேண்டிய இடத்தில் உள்ள நாம், இது போன்ற தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமாகக் கடமையாற்றுவோம்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.