Tamilசெய்திகள்

போலீஸ் குதிரைப்படையின் நூற்றாண்டு விழாவுக்காக தயாராகும் குதிரைகள்!

சென்னை மாநகர போலீஸ்துறையில் குதிரைப்படை போலீஸ் பிரிவும் ஒரு அங்கமாக இருக்கிறது. மிகப்பெரிய பாரம்பரியத்தை உள்ளடக்கிய குதிரைப்படை போலீஸ் பிரிவு நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகி வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1926-ம் ஆண்டு 54 குதிரைகளுடன் சென்னை போலீசின் ஒரு அங்கமாக குதிரைப்படை பிரிவு தோற்றுவிக்கப்பட்டது.

அந்த கால கட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் குதிரைகளைத்தான் பயன்படுத்துவார்கள். ரோந்து செல்வதற்கு குதிரைப்படைதான் பேருதவியாக இருந்தது. தற்போதும் குதிரைப்படை சென்னை போலீசுக்கு உற்ற துணையாக செயல்படுகிறது.
மெரினா கடற்கரையில் தினமும் பாதுகாப்பு பணிக்கு குதிரைப்படை அனுப்பப்படுகிறது. சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களின்போது இந்த குதிரைகளின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.

விநாயகர் சிலை ஊர்வலம் போன்ற முக்கியமான நிகழ்வுகளிலும் குதிரைப்படை போலீசார் முக்கிய பங்காற்றுகிறார்கள். சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சியில் போலீஸ் அரங்கில் பொதுமக்களை கவரும் வகையில் வண்ண உடை அலங்காரத்தில் இந்த குதிரைகள் நிறுத்தப்படுவதும் வழக்கம்.

தற்போது சென்னை போலீஸ் குதிரைப்படை விளையாட்டுகளிலும் பங்கேற்கிறது. சமீபத்தில் போலீஸ் குதிரை விளையாட்டு போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் குதிரைப்படையை சேர்ந்த குதிரைகள் சாகசங்களை நிகழ்த்தி வெற்றி வாகை சூடி பதக்கங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் குதிரைப்படை சென்னை போலீசில் முக்கிய பிரிவாக நாளுக்கு, நாள் உருவெடுத்து வருகிறது. தற்போது சென்னை குதிரைப்படை போலீசில் 12 பெண் குதிரைகளும், 13 ஆண் குதிரைகளும் என 25 குதிரைகள் உள்ளன. சென்னை பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் குதிரைப்படை பிரிவு செயல்படுகிறது. இங்கு 40 குதிரைகள் இடம் பெறும் வகையில் வசதி வாய்ப்புகள் உள்ளது. நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள இந்த தருணத்தில் புதிதாக மேலும் 5 குதிரைகள் சேர உள்ளது.

டெல்லியில் உள்ள ராணுவ முகாமில் இருந்து புதிய குதிரைகளை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்க உள்ளனர். நூற்றாண்டு விழாவை காண உள்ள குதிரைப்படை போலீஸ் பிரிவை புதுப்பொலிவுடன் சீரமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். அதன் மூலம் புதிதாக குதிரை லாயங்கள் கட்டப்படுகின்றன. பழைய லாயங்கள் இடிக்கப்படுகிறது. இந்த குதிரைப்படை பிரிவு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் தலைமையக கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் கயல்விழி, துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உள்ளது. குதிரைப்படையை சிறப்பாக செயல்படுத்த இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் தலைமையில் 2 பெண் போலீசார் உள்பட 19 போலீசார் பணியில் உள்ளனர்.

குதிரைகளை பராமரிப்பதற்கு தனியாக பராமரிப்பாளர்கள் இருக்கிறார்கள். 8 வயதில் குதிரைகள் வாங்கப்படுகின்றன. அவற்றிற்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. 20 வயது வரை குதிரைகள் போலீசில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றன. 20 வயது நிரம்பியவுடன் அந்த குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. பின்னர், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

அந்த தொண்டு நிறுவனத்தில் வாழ்ந்து குதிரைகள் தங்களை ஆயுட் காலத்தை முடித்துக் கொள்கின்றன. குதிரைப்படையின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.