Tamilசெய்திகள்

போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த கொள்ளையன் முருகன்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்த முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் போலீஸ் பிடி இறுகியதால் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான்.

இவன் மீது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன.

பெங்களூரில் மட்டும் பல்வேறு இடங்களை குறிவைத்து முருகன் கொள்ளையடித்துள்ளான். இதையடுத்து பெங்களூரு போலீசார் முருகனை காவலில் எடுத்தனர். அப்போது திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது முருகன் புதைத்து வைத்திருந்த 12 கிலோ, திருச்சி ஜூவல்லரி நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டு சென்றனர். இவர்களை வழிமடக்கிய திருச்சி போலீசார், லலிதா ஜூவல்லரி நகைகளை பெங்களூரு போலீசிடம் இருந்து மீட்டனர்.

பெங்களூரு போலீசாரின் பிடியில் இருக்கும் முருகன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டபோது, 2 மணி நேரத்துக்கு மேல் அவனிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முருகன் தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பற்றியும் பல்வேறு தகவல்களை கூறியுள்ளான்.

கடந்த 2017-ம் ஆண்டு திருவாரூர் முருகன் சென்னையிலும் கைவரிசை காட்டி இருந்தான். தனது கூட்டாளிகள் 7 பேருடன் சேர்ந்து தொடர் கொள்ளையில் அவன் ஈடுபட்டான்.

சென்னை அண்ணாநகர், நொளம்பூர், அமைந்தகரை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 50 வீடுகளில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்து இருந்தான்.

இது தொடர்பாக அப்போது தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கொள்ளை வழக்கில் துப்பு துலக்கிய சென்னை போலீசார் முருகனின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். முருகன் மட்டும் சிக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு லலிதா ஜூவல்லரி கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளான். பெங்களூரு போலீசார் சில நாட்களுக்கு முன்பு முருகனை அழைத்து வந்தபோது, திருச்சி போலீசார் நடத்திய விசாரணையில் முருகன் இந்த தகவலை கூறியுள்ளான்.

2017-ம் ஆண்டில் அண்ணாநகர் பகுதியில் நடந்த கொள்ளை வழக்கில் தனது கூட்டாளிகள் அனைவரும் பிடிபட்டபோதுதான், முருகன் குறிப்பிட்ட ஒரு அதிகாரியிடம் போனில் பேரம் பேசி இந்த பணத்தை கொடுத்துள்ளதாக பரபரப்பு தகவல்களை கூறி உள்ளான்.

சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய கொள்ளையன் முருகன், எல்லோரும் என்னை விட்டு விட்டார்கள். நீங்கள் மட்டும் எனக்கு தொடர்ந்து தொல்லை தருகிறீர்கள். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள், நான் செய்து தருகிறேன் என்று தெரிவித்துள்ளான். இதற்கு போலீஸ் அதிகாரியும் சரி என்று தலையாட்டியுள்ளார்.

இதையடுத்து சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த ரூ.5 கோடி நகை, ரூ.19 லட்சத்தில் முருகன் போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளான்.

இதன் பிறகும் போலீஸ் அதிகாரி தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் மேலும் ரூ.20 லட்சத்தை ஒரு ஓட்டலின் முன்பு காரில் வைத்து கொடுத்ததாகவும் முருகன் கூறியுள்ளான். அங்கிருக்கும் கேமராவில் அது பதிவாகி இருப்பதாகவும் முருகன் தெரிவித்துள்ளான்.

சென்னை கொள்ளை வழக்கில் சிக்காமல் இருப்பதற்கு 2 தலைமை காவலர்கள் உதவி செய்துள்ளதாகவும் முருகன் கூறியுள்ளான்.

கொள்ளையன் முருகனின் இந்த குற்றச்சாட்டு தனிப்படையில் இடம் பெற்றிருந்த சென்னை போலீஸ் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளையன் முருகன் திருவாரூர் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு ரூ.10 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கொள்ளையன் முருகன் வழக்கு விசாரணையின்போது இதுபோன்று போலீஸ் மீது அவதூறு பரப்புவது வழக்கமானதுதான் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் முருகனின் குற்றச்சாட்டு உண்மைதானா? என்பது பற்றி உயர் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

போலீஸ் அதிகாரிகள் மீது கொள்ளையன் முருகன் சுமத்தி வரும் தொடர் குற்றச்சாட்டுகள் போலீஸ் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *