போலீசாருக்கு ரத்த தான முகாம் – முதல்வர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் போலீசாருக்கான ரத்த தான முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மே மாதம் விடுமுறை காலம் என்பதால் கொடையாளர்களிடம் ரத்த தானம் பெறும் அளவு குறைகிறது. எனவே, தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜூன் மாதத்தில் போலீசாரிடம் ரத்ததானம் பெற்று ரத்த வங்கிகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு முதன்முதலாக போலீசாருக்கான ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போலீஸ் ரத்ததான முகாம் இன்று தமிழகம் முழுவதும் 89 இடங்களில் நடைபெறுகிறது. இதில் ஏராளமான போலீசார் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த ரத்த தான முகாமை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரத்ததான முகாம்களில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்யுமாறு போலீசாருக்கு உயர் அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.