போலி கணக்குகள் விவகாரம் – டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய எலான் மஸ்க்
டுவிட்டரில் போலி கணக்குகள் எத்தனை உள்ளது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்காத வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் முன் நகராது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடகமான டுவிட்டரை, ரூ.3.34 லட்சம் கோடிக்கு வாங்குவதற்கு முன்வந்தார். இதற்கான ஒப்பந்தம் இன்னும் நிறைவடையாமல் உள்ள நிலையில், டுவிட்டரில் 20 – 50 சதவீதம் போலி கணக்குகள் இருப்பதாகவும், அதை கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்த டுவிட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால், மொத்த டுவிட்டர் பயன்பாட்டாளர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் கடுப்பான எலான் மஸ்க், அவரை அவமானம் செய்யும் வகையில் ‘மலம்’ எமோஜியை ட்விட்டரில் பதிவு செய்தார்.
இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-
டுவிட்டர் நிறுவனம் இதுவரை அமெரிக்க அரசின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் மேற்கொண்ட கணக்குகளின் அடிப்படையில் தான் நான் அந்நிறுவனத்தை வாங்கும் தொகையை முன் வைத்தேன். ஆனால் டுவிட்டர் சி.இ.ஓ, டுவிட்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவாக போலி கணக்குகள் இருக்கிறது என்பதை மட்டுமே கூறி வருகிறார். ஆனால் அவற்றின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிட மறுத்துவிட்டார். அதை நிரூபிக்கும் வரை டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.