விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் டிம்பிள் ஹயாதி. பிரபுதேவாவின் தேவி-2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இவர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடித்த கில்லாடி படம் திரைக்கு வந்துள்ளது. இவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் டிம்பிள் ஹயாதி பெயரை பயன்படுத்தி சிலர் திரையுலக முக்கிய பிரமுகர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து டிம்பிள் ஹயாதி கவனத்துக்கு சிலர் கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியான அவர் போலிகளிடம் ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில் டிம்பிள் ஹயாதி வெளியிட்ட பதிவில், “குறிப்பிட்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை நம்பவேண்டாம். அந்த எண்ணில் இருந்து பேசுபவர்கள் எனது பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். எனவே அந்த நம்பரை பிளாக் செய்து விடுங்கள். புகாரும் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.