Tamilசினிமா

‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம் – நடிகர் சரத்குமார் நம்பிக்கை

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றதைத்தொடந்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையடுத்து ‘போர் தொழில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ் மேத்தா, எப்ரியாஸ் ஸ்டுடியோஸைச் சேர்ந்த சந்தீப் மெஹ்ரா, விநியோகஸ்தர் சக்திவேலன், இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வம் சிவாஜி, இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ், நடிகர்கள் ஆர். சரத்குமார், அசோக் செல்வன், நடிகை நிகிலா விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில், நடிகர் சரத்குமார் பேசியதாவது, ” இயக்குனர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார். இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குனராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, ‘இருக்கிறது, முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்’ என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது. இதுவரை 150- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40-க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது. இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்.

எலியும், பூனையுமாக இருக்கும் இரண்டு கதாபாத்திரங்கள், எப்படி உச்சகட்ட காட்சியில் ஒன்றிணைந்து குற்றவாளியை கண்டறிகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த திரைப்படத்தை காவல்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் காண வேண்டும் என விரும்புகிறேன். ஏனெனில் குற்றவாளியின் மூளைக்குள் ஊடுருவி அவன் ஏன்? இந்த குற்றத்தை செய்தான் என்பதை கண்டறிய வேண்டும் என்பதை மிக விரிவாக இப்படத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படம், ஒரு சீரியஸான படமல்ல. அசோக் செல்வன் ஆங்காங்கே சில நடிப்பையும் வசனங்களையும் பேசுவார். அது சிரிப்பை வரவழைக்கும். இன்று மக்கள் திரையரங்கிற்கு வருகை தந்து திரைப்படங்களை பார்த்து ரசிப்பது குறைந்து வருகிறது. ஒரு மாதம் காத்திருந்தால் ஓ டி டி யில் பார்த்து விடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால் இந்த ‘போர் தொழில்’ திரைப்படம் திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம் ” என்றார்.