உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய தாக்குதல் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளின் தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, போரில் உருக்குலைந்துள்ள உக்ரைன் நாட்டிற்கு உதவுதற்காக சர்வதேச நாடுகள் உறுதியளித்துள்ளன. இந்த ஆண்டிற்கான (2022) உக்ரைன் மீட்பு மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
இந்நிலையில், உக்ரைன் மீட்பு மாநாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரஷியா உடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனை புனரமைக்க 750 பில்லியன் டாலர் தேவை என தெரிவித்தார்.
இந்த நிதியை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள நாடுகள் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.