ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில நிதி காப்பாளர் மோசஸ் திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பணிக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர், அலுவலர்களுக்கு சம்பளம் ரத்து என தலைமை செயலர் கிரிஜா எச்சரிக்கை விடுத்துள்ளதை கண்டிக்கிறோம். 2017 முதல் கோரிக்கைகளுக்காக போராடி வருகிறோம். 2 ஆண்டுகளாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அவமானப்படுத்துகின்றனர். நீதிமன்றம் மூலம் போராட்டத்தை முடக்க நினைக்கின்றனர். ஆனால் எந்தவித மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
எல்.கே.ஜி. -யு.கே.ஜி. கல்வியை அரசு பள்ளிகளில் தொடங்க வலியுறுத்தினோம். மாறாக அங்கன்வாடி மையங்களில் தொடங்கி ஆங்கில வழிக்கல்வியை கொடுப்பதாக கூறுகின்றனர்.
இது தமிழ் வழி கல்விக்கு விரோதமான செயல். 3,500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம் தொடக்க கல்வித்துறைக்கு மூடுவிழா காண நினைப்பது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்களை எல்.கே.ஜி.-யு.கே.ஜி. வகுப்பிற்கு பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.