Tamilசெய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை பேரணியை அறிவித்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே போலீசார் கைது செய்தனர்.

உழைப்பாளர் சிலை அருகே முற்றுகை பேரணியில் ஈடுபட முயன்றவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேப்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் அதிக மாற்றுத்திறனாளிகளை சேர்த்தது தமிழ்நாடு தான் என்றார்.