தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் கடந்த 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு, நோயாளிகள் அவதிப்பட்டுவருகின்றனர்.
அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தார்.
போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் அவர்களது பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்தார். இதனை அடுத்து மருத்துவர்களில் ஒரு பகுதியினர் வேலைக்கு திரும்பினர்.
மக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பவர்கள், பணிக்கு வரமாட்டோம் என பிடிவாதமாக இருந்தால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எச்சரித்துள்ளார். அங்கீகரிக்கப்படாத சங்கத்தைச் சேர்ந்தவர்களே போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் போராட்டடக் களம் அல்ல. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இன்று மாலைக்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும்.
அந்த காலியிடங்களுக்கு புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். புதிய மருத்துவர்களை நியமிக்கும் பணி இன்று மாலை தொடங்கும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 50 மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.