X

போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைவர்கள் தான் பொறுப்பு – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி இந்தியன் மக்கள் மன்ற தலைவரும் பத்திரிகையாளருமான வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில், போலீசின் முறையான அனுமதி பெறாமல் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சி தலைவர்களும் சட்ட விரோதமாக பேரணி நடத்த முடிவு செய்து உள்ளனர். ஏற்கனவே மாணவர்கள் நடத்திய போராட்டத்தினால்தான் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் இதுபோன்ற போராட்டத்தை நடத்தினால் தேவையில்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மேலும், குடியுரிமை திருத்த சட்டத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும். பேரணி நடத்த அனுமதி வழங்கக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதேபோல, வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவரும் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை அவசர வழக்குகளாக நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் நேற்று இரவு 9.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அரசு தரப்பில் அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன், மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஜானகிராமன், ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது நடந்த வாதம் பின்வருமாறு:-

அரசு பிளடர்:- தி.மு.க. சார்பில் பேரணி நடத்த அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை போலீசார் பரிசீலித்தனர். பின்னர், இந்த பேரணியில் கொடும்பாவி எரிக்கப்படுமா? வன்முறை நடைபெற வாய்ப்பு உள்ளதா? என்பது உள்பட 21 கேள்விகளை கேட்டு கடந்த 19-ந்தேதி தி.மு.க.வுக்கு, கடிதம் அனுப்பினர். இதில், முக்கிய கேள்விகள் உள்பட பெரும்பாலான கேள்விகளுக்கு பொருந்தாது என்ற பதிலை தி.மு.க. தரப்பில் அளித்துள்ளதால், பேரணி நடத்த அனுமதி வழங்க மறுத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

நீதிபதிகள்:- போலீசார் அனுமதி வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் வழக்கு ஏதாவது தொடரப்பட்டுள்ளதா?

அரசு பிளடர்:- இல்லை. இதுவரை வழக்கு தொடரவில்லை.

நீதிபதிகள்:- ஒருவேளை போலீசார் அனுமதி வழங்காவிட்டாலும், அவர்கள் தடையை மீறி பேரணி சென்றால், அப்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது? தினமும் ஊடகங்கள் மூலம் பஸ் எரிப்பு, ரெயில் தண்டவாளம் உடைப்பு என்று ஏராளமான வன்முறை சம்பவங்களை பார்க்கின்றோம். அதுபோன்ற சம்பவம் நடந்தால், யார் பொறுப்பு? தேவையில்லாமல் பொது சொத்துகளை சேதப்படுத்துவது, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது.

அரசு பிளடர்:- அதுபோன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை. பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என்றால், அவர்கள் பேரணி செல்லக்கூடாது. ஒருவேளை தடையை மீறி சென்றால், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு தெரியும்.

நீதிபதிகள்:- ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடந்தால், முழு பொறுப்பையும் நீங்கள் ஏற்க முடியுமா? பேரணி, ஊர்வலம் போன்றவற்றில் கடைநிலை தொண்டர்கள் முதல் நபராக நிற்கிறார்கள். கலவரம், தடியடி என்று எந்த ஒரு சம்பவம் நடத்தாலும், தொண்டர்கள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். தலைவன் பின்னால் நிற்பதால், எந்த பாதிப்பும் இல்லை. அதனால்தான் இதுபோன்ற சம்பவங்களில் நடைபெறும் கலவரத்துக்கும், பொது சொத்துகள் அழிப்புக்கும் கட்சித் தலைவர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, பேரணி நடத்த வேண்டும் என்றால், அரசியல் கட்சிகள் ரூ.1 கோடி முன்தொகை செலுத்த வேண்டும். பொது சொத்துகள் சேதம் அடைந்தால், சேதம் அடைந்த சொத்தின் மதிப்புக்கு 2 மடங்கு அதிகம் அக்கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இது எங்கள் உத்தரவு இல்லை. இது எங்களது கருத்து.

இவ்வாறு வாதம் நடந்தது.

இதன் பின்னர் நீதிபதிகள், ‘ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் ஊர்வலம், பேரணி நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற போராட்டத்தை தடுக்க முடியாது. அதேநேரம், பொதுமக்களுக்கும், பொது சொத்துக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. எனவே, அசம்பாவிதம் நடந்தால், தகுந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் திங்கட்கிழமை (இன்று) பேரணி செல்லும் இடங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்யவேண்டும். இதற்காக பறக்கும் கேமராக்களையும் அப்பகுதியில் பயன்படுத்த வேண்டும். ஏதாவது அசம்பாவித சம்பவம் நடந்ததால் அதற்கு தலைவர்களை பொறுப்பாளிகளாக்க வேண்டும்’ என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

Tags: south news