X

போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி – 5 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்கிறார்

அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் சென்று நாடு திரும்பி பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.

முதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ஒரே நாளில் ஐந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, பாஜக தொண்டர்களின் பூத் அளவிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

மத்தியப் பிரதேச மாவட்டத்தின் ஷாதோல் மாவட்டத்துக்கு இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், போபால் மாவட்டத்திற்கான பயணம் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிவ் சவுகான் தெரிவித்துள்ளார்.

திட்டப்படி, இன்று காலை போபாலுக்கு செல்லும் பிரதமர் மோடி ராணி கமலாபதி ரெயில் நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து, வந்தே பாரத் அதிவேக ரயில்களான ராணி கமலாபதி (போபால்)-ஜபல்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கஜுராஹோ-போபால்-இந்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மட்கான் (கோவா)-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தார்வாட்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், மற்றும் ஹதியா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்கள் தொடங்கி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வந்தே பாரத் ரெயில்களை நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

நான் நாளை (இன்று) ஜூன் 27-ம் தேதி போபாலில் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். முதலில், ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியில் 5 வந்தே பாரத் ரெயில்கள் கொடியேற்றப்படும். இந்த ரெயில்கள் மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, பீகார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில நகரங்களை இணைக்கும்.

மேலும், “மேரா பூத் சப்சே மஸ்பூட்’ திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பு வளர்ந்த இந்தியாவுக்கான அவர்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தும் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags: tamil news