போபாலில் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து – தீயை அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை நாடிய மாநில அரசு
மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது. இந்த அரசு கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும் தீ பரவியது. இதையடுத்து, ஊழியர்கள், அலுவலர்கள் உடனடியாக கட்டிடத்தில் இருந்து வெளியேறினர். இதனால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
கட்டிடத்தில் இருந்த பர்னிச்சர் மற்றும் ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 15 வாகனங்களை ஈடுபடுத்தி உள்ளனர். இந்நிலையில், தீ 50 சதவீதம் கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீயை முழுவதும் அணைக்க இந்திய விமானப் படையின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. மேலும், மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசி ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.