X

போதை பொருள் விவகாரம் – கங்கணாவுக்கு பதிலடி கொடுத்த ஊர்மிளா

இந்தி பட உலகில் போதை பொருள் புழக்கம் அதிகம் உள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறும்போது, “சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடக்கும் விருந்துகளில் கொக்கைன் போதை பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது விலை அதிகம் என்பதால் இலவசமாகவே வழங்குகிறார்கள்.

தண்ணீரில் கலந்து விருந்தில் பங்கேற்பவர்களுக்கு தெரியாமலேயே கொடுத்தும் விடுவார்கள். போதை பொருள் தடுப்பு போலீசார் இந்தி பட உலகில் புகுந்தால் பெரிய நடிகர்கள் ஜெயிலுக்கு போவார்கள். அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்தால் அதிர்ச்சியான உண்மைகள் வெளிவரும்” என்றார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கங்கனா ரணாவத் குற்றச்சாட்டை தமிழில் இந்தியன் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை ஊர்மிளா கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, “கங்கனா ரணாவத் இந்தி பட உலகம் குறித்தும் மும்பை குறித்தும் அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார். மும்பை மக்களை அவமரியாதை செய்துள்ளார். மும்பை மகளான என்னால் இதனை பொறுக்க முடியாது.

நாடு முழுவதுமே போதை பொருள் அச்சுறுத்தல் உள்ளது. கங்கனா ரணாவத் போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தை அவரது சொந்த மாநிலமான இமாசலபிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். அங்குதான் போதை பொருள் உற்பத்தி ஆகிறது. கத்தி பேசுவதால் நீங்கள் சொல்வது உண்மையாகி விடாது” என்றார்.