போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நடிகை தீபிகா படுகோனேனின் பெண் மேலாளர் தலைமறைவு

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் பிரபல நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இந்த நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி திடீரென நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளரான கரிஷ்மா பிரகாசின் மும்பை வெர்சோவாவில் உள்ள வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர். இந்த சோதனையில் 1.8 கிராம் கஞ்சா சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் கஞ்சா செடியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட 2 பாட்டில் எண்ணெய்யும் சிக்கியது.

இதையடுத்து கரிஷ்மா பிரகாசை கடந்த மாதம் 28-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஆனால் அதன்படி அவர் அன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. கரிஷ்மா பிரகாஷ் மும்பையில் இல்லை என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், “கரிஷ்மா பிரகாஷ் சம்மனை ஏற்று ஆஜராகாததால் அவருக்கு மேலும் பல முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஒருபோதும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. பதிலும் அளிக்கவில்லை. அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை” என்றார்.

இதற்கிடையே கரிஷ்மா பிரகாஷ் முன்ஜாமீன் கேட்டு ஏற்கனவே கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் தற்கொலையுடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools