“செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே. சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை” என்று தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக, எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22-ம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.
உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதுமே. நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத் துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழு விபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜாபர்சாதிக், கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மங்கை’ படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.