ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 50 ரன்னும், மேக்ஸ்வெல் 40 ரன்னும் எடுத்தனர். முகமது ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேதர் ஜாதவ் 87 பந்தில் 81 ரன்னும், டோனி 59 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.
இந்திய அணி ஒரு கட்டத்தில் 99 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான டோனி – கேதர் ஜாதவ் ஜோடி பொறுப்பாக விளையாடி 141 ரன்களை எடுத்து வெற்றி பெற வைத்தது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-
டோனியும், கேதர் ஜாதவும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள். டோனியின் அனுபவத்துடன் கேதர் ஜாதவின் நுட்பத்திறன் வெளிப்பட்டது. இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் பந்து வீச்சாளர்களால்தான் இந்த வெற்றி கிடைத்தது. பவுலர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர்.
முகமது ஷமி மிகவும் நேர்த்தியாக வீசினார். இதேபோல் குல்தீப் யாதவும், பும்ராவும் நன்றாக செயல்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற கேதர் ஜாதவ் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவிலும் சமீபத்தில் இதுபோன்ற போட்டி ஒன்றில் சேஸிங் செய்தோம். மறுமுனையில் டோனி இருக்கும்போது அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
மிடில் ஆர்டர்களில் ஆட்டத்தை கணித்து விளையாட டோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் வருகிற நாளைமறுநாள் நடக்கிறது.