X

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் அபராத கட்டணம் உயர்வு – இன்று அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டு விபத்துகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராத கட்டணத்தை மத்திய அரசு கடந்த 2019-ம் ஆண்டு அதிரடியாக உயர்த்தியது. இதன்படி ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இதுபோன்று பல்வேறு போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதனை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பான அரசாணையை கடந்த வாரம் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டார். இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகரிக்கப்பட்ட அபராத தொகை இன்று முதல் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகையை வசூலிப்பது தொடர்பான ஆரம்பகட்ட பணிகளை இன்று தொடங்கினார்.

இன்று காலையில் அவசரம் அவசரமாக அலுவலகங்களுக்கு சென்றவர்கள், வெளியிடங்களுக்கு சென்றவர்கள் ஆகியோரை மடக்கி பிடித்த போக்குவரத்து போலீசார் புதிய அபராத தொகை தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். வேப்பேரி கமிஷனர் அலுவலக சந்திப்பில் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையிலான போலீசார், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்களை மடக்கி பிடித்து புதிய போக்குவரத்து அபராத தொகை குறித்து எடுத்துக் கூறினார்கள். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களை வேகமாக ஓட்டினாலும் அபராதமாக கூடுதல் தொகையை செலுத்த நேரிடும் என்றும் எச்சரித்தனர்.

மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் என்றும், இலகுரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ஆயிரம் ரூபாயும், நடுத்தர மற்றும் கனரக வாகனத்தை வேகமாக ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக செலுத்த வேண்டியது இருக்கும் என்றும் எச்சரிக்கை செய்தனர். அதே நேரத்தில் அதிவேகமாக கண்மூடித்தனமாக வாகனத்தை ஓட்டினாலும் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினாலும் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இந்த தவறை மீண்டும் செய்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளிடம் எடுத்துக் கூறப்பட்டது. உடல் மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதல் முறை ரூ.1000-மும், 2-வது முறை ரூ.2 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும் என்றும், ரேசில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை பற்றியும் புதிய அபராத தொகை குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார்கள். சீட் பெல்ட்டு அணியாமல் கார் ஓட்டினாலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் வாகனம் ஓட்டினாலும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் ரூ.1000 அபராத தொகை வசூலிக்க சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர பணிகளுக்கான வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் முதலில் ரூ.2 ஆயிரமும், பின்னர் ரூ.4 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து காலை 10 மணியில் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. திடீரென மோட்டா் வாகன விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவிலான தொகையை போலீசார் கேட்டதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

ஒரு சிலர் இன்று மட்டும் விட்டு விடுங்கள் சார், நாளை முதல் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவற்றுடன் பயணிக்கிறேன் என்றும் கூறினர். புதிய அபராத கட்டணங்கள் அதிகமாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். புதிய அபராத தொகையை வசூலிப்பதற்கு ஏதுவாக போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் கையடக்க எந்திரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய போக்குவரத்து விதிமீறல் குற்றங்களுக்கான கூடுதல் அபராத தொகை போக்குவரத்து கணினி சேவை மையத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கும் கையடக்க எந்திரத்திலும் அது அப்டேட் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.