நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கடும் வெயிலுக்கு மத்தியிலும் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார் வெயிலால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி.ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை அணிவதன் மூலம் அவர்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். இந்த ஹெல்மெட்டை அணிந்து போக்குவரத்து போலீசார் பணியாற்றி வரும் காட்சிகள் வலைதளங்களில் பரவி வருகிறது. அங்குள்ள ஐ.ஐ.எம். மாணவர்கள் உருவாக்கி கொடுத்துள்ள இந்த வித்தியாசமான ஹெல்மெட் பேட்டரியில் இயங்க கூடியது.
பொதுவாக நாம் அணியக்கூடிய ஹெல்மெட்டின் உள்ளே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமைப்பில் சிறிய வகையிலான மின்விசிறி இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேன் பேட்டரி மூலம் இயங்கும். ஹெல்மெட்டின் உள்ளே பேன் இருக்கும் நிலையில் அதற்கான பேட்டரியை தனியாக போலீசார் இடுப்பில் அணிந்து கொள்வார்கள். பேட்டரிக்கும், ஹெல்மெட்டில் உள்ள பேனும் வயர் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ஹெல்மெட்டின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.
முதற்கட்டமாக 450 போக்குவரத்து போலீசாருக்கு இந்த ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.