X

போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு

போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் வாகனங்களை பதிவு செய்வதற்கு கட்டணம், பேன்சி நம்பர் வாங்குவதற்கு கட்டணம், டிரைவிங் லைசென்ஸ் மற்றும் எல்.எல்.ஆர். வாங்குவதற்கு கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வாகனங்கள் சரிவர பராமரிக்கப்பட்டு இயக்குவதற்கு தகுதியான வாகனம் என சான்றிதழ் அளிப்பதற்கு (எப்.சி.) குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புதிய வாகனங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல வகைகளில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவை கட்டணங்கள் மூலம் போக்குவரத்து துறைக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் மட்டும் தமிழக அரசுக்கு வாகனப்பதிவு, மோட்டார் வாகன வரி மற்றும் பிற கட்டண சேவைகள் வாயிலாக வருமானம் ரூ.5,271.9 கோடியாக இருந்தது. போக்குவரத்து துறைக்கு இந்த வருவாய் போதாது என்பதால் சேவை கட்டணங்களை உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளது.

ஆனால் டிரைவிங் லைசென்ஸ் கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு கடந்த மாதம் சில கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி போக்குவரத்து துறை சேவைகளுக்கான கட்டணம் 10 மடங்கு வரை உயரும் என தெரிகிறது.

மோட்டார் வாகன கட்டணம் திருத்தம் இதற்கு முன்பு 2006-2007-ல் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு இப்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட கட்டணம் எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்பது பொதுமக்களுக்கு இந்த மாத இறுதியில் தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது திருத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன திருத்த சட்டத்தில் வாகனம் ஓட்டுபவரின் உடல் தகுதியும் முக்கியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கிகள் மூலம் சரிபார்க்கும் ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகலுக்கான கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.400 ஆகவும் கூடுதலாக ஒவ்வொரு சேவைக்கும் ரூ.250 வரை புதிய கட்டணம் வசூலிக்கப்பட கூடும் என தெரிகிறது.