போகிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய மக்கள்!

மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது.

அவ்வகையில் இந்த ஆண்டின் போகிப் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலையில் பழைய பொருட்களை சேகரித்து தங்கள் வீடுகளின் முன்பு எரித்தனர்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது குடும்பத்தினருடன் சென்னையில் போகி பண்டிகையை கொண்டாடினார்.

ஆனால், காற்றை மாசுபடுத்தும் வகையில் போகியை கொண்டாடக் கூடாது என்பதில் பொதுமக்களும் கவனமாக இருந்ததை காண முடிந்தது. பெரும்பாலான இடங்களில் சம்பிரதாயத்திற்காக, ஒருசில பொருட்கள் மற்றும் தேவையற்ற மட்கும் குப்பைகளை மட்டுமே எரித்து போகியை கொண்டாடியதை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே பெரிய அளவில் நெருப்பு மூட்டி போகியை கொண்டாடினர்.

ஏற்கனவே அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் போகி புகையும் இணைந்ததால், பெருநகரங்களில் காலை வேளையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. சென்னையின் பல்வேறு இடங்கள் புகை மண்டலங்களாக காட்சியளித்தன. பனி மூட்டம் மற்றும் புகை மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து காற்றை மாசுப்படுத்த வேண்டாம் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. காற்றின் தரத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து ஆய்வு செய்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news