பொள்ளாச்சி சம்பவ குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நயவஞ்சக கும்பலால் காதல் ஆசை காட்டி வீழ்த்தப்பட்ட பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடூரங்கள் குறித்து வெளியாகி வரும் செய்திகள் மனதை பதைபதைக்க வைக்கின்றன. இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் அதிகபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்; எள் முனையளவும் இரக்கம் காட்டப்பட தகுதியற்றவர்கள் ஆவர்.

இத்தகைய கொடூரங்களுக்கு சம்பந்தப்பட்ட மனித மிருகங்களையும், பாதிக்கப்பட்ட பெண்களின் ஏமாளித்தனத்தையும் மட்டும் காரணம் காட்டிவிட்டு, நாம் கடந்து போய்விட முடியாது. பொள்ளாச்சி கொடூரத்துக்கு சமுதாயமும் பொறுப்பேற்க தான் வேண்டும். ஏனெனில் நம்மை சுற்றியுள்ள நல்ல விஷயங்கள் குறித்தும், கெட்ட விஷயங்கள் குறித்தும் நமது அடுத்த தலைமுறையினருக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் தவறியிருக்கிறோம். இது சமூகத்தின் தவறு.

ஆண் குழந்தைகளாக இருந்தாலும், பெண் குழந்தைகளாக இருந்தாலும் அவர்களுடன் நேரத்தை செலவிடாமல் பணிக்காகவும், பொருளுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர் சித்திரங்களை வாங்க கண்களை விற்பவர்களாக தான் இருக்க முடியும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் அவற்றுக்கு சென்று திரும்பும் வழியில் நடக்கும் நிகழ்வுகளாக இருந்தாலும், எதிர்கொள்ளும் பிரச்சினைகளாக இருந்தாலும் அதை தயக்கமின்றி குடும்பத்தினரிடம் கூறலாம்; அவர்கள் தீர்வு கூறுவர் என்று பெண் பிள்ளைகள் நம்பும் ஆரோக்கியமான சூழல் ஒவ்வொரு வீட்டிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் குழந்தைகளின் மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பது செல்போன்கள் ஆகும். அனைத்து தீமைகள் மற்றும் சீரழிவுகளுக்கு நுழைவாயிலாக அமைவது செல்போன்கள் தான். எனவே, அழிவின் ஆயுதமான செல்போன்கள் தேவையில்லாமல் குழந்தைகளின் கைகளில் கிடைக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்; அதை தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். இதை உங்கள் குடும்ப மூத்த உறுப்பினரின் அறிவுரையாக கருதி அனைவரும் பின்பற்ற வேண்டும்.

பெண் குழந்தைகள் அவர்களின் பதின்வயதில் எந்த மனச்சிதறல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. படிக்கும் வயதில் உயர்கல்வியும், அதற்கேற்ற வேலைவாய்ப்பும் தான் அவர்களின் இலக்காக இருக்க வேண்டும். அறிமுகமற்றவர்களின் அன்பைக்கூட சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டும். காதல் நாடகமாடி வாழ்க்கையை சீரழிக்க முயலும் வஞ்சகர்களிடம் விழிப்புடன் விலகியிருக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு கட்டுப்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறும் பெற்றோர், ஆண் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும். பெண்களை சகோதரிகளாக நினைத்து மதிக்கும் மாண்பை ஆண் குழந்தைகளிடம் பெற்றோர் விதைக்க வேண்டும்.

அதற்கெல்லாம் மேலாக, பெண்களை மயக்கும் கயமை போக்கை கைவிட்டு, மதிக்கும் போக்கை நமது இளைஞர்களுக்கு கற்பிக்க சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர்களும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news