இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது.
இரவு 7 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.
இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடரை வெல்ல கடுமையாக போராட வேண்டும்.
இந்த ஆட்டம் குறித்து இந்திய வீரர் ரோகித்சர்மா கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் இருக்கிறது. அதற்கான இந்திய அணியை பலப்படுத்த முயற்சித்து வருகிறோம். தற்போது அதைவிட வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்வதே முக்கியமாகும்.
தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறுவதன் மூலம் உலக கோப்பைக்கு அதிக நம்பிக்கை ஏற்படும். ஒவ்வொரு போட்டியில் ஏற்படும் தவறுகளில் இருந்து நாங்கள் பாடம் கற்று வருகிறோம்.
பொல்லார்ட் தலைமையில் வெஸ்ட்இண்டீஸ் அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக திகழ்கிறது. அந்த அணியில் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.
ஐ.பி.எல். போட்டியில் நாங்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடி இருக்கிறோம். அவரை பற்றி எனக்கு நன்றாக தெரியும். கிரிக்கெட் பற்றி அதிக நுணுக்கங்களை அறிந்தவர் பொல்லார்ட் புத்திசாலித்தனமான வீரர் மட்டுமல்ல. சிறந்த கேப்டனும் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரோகித்சர்மா கடந்த 2 ஆட்டத்திலும் சிறப்பாக ஆடவில்லை. ஒரு சிக்சர் கூட அடிக்காமல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்று சொந்த மண்ணில் விளையாடுவதால் ரோகித்சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.