Tamilசெய்திகள்

பொறியியல் கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி தொடங்குகிறது – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது ஒரு மாதம் முன் கூட்டியே தொடங்குகிறது. ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு தொடங்கி நடைபெறும். பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கல்லூரிகளில் திறந்து இருக்கும். சி.பி.எஸ்.இ., மாநில கல்வி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் ஜூலை 7-ந்தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும். பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை கட்டணம் குறைக்கப்படுகிறது.

ஒவ்வொரு கல்லூரியிலும் பலவிதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. ஏழை மாணவர்கள் நலன் கருதி எல்லா கல்லூரிகளிலும் சேர்க்கை கட்டணம் ஆண்டுக்கு ரூ.200 வீதம் ஒவ்வொரு ஆண்டிற்கும் இனி வசூலிக்கப்படும். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.