பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் – நடிகை வரலட்சுமி காட்டம்
சமீபத்தில் நடிகை வரலட்சுமிக்கும் மும்பை தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் மும்பையில் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனையடுத்து அவரது நிச்சயதார்த்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அச்சமயத்தில் தன்னைப் பற்றி வரும் அவதூறு கருத்துக்களுக்கு வரலட்சுமி சரத்குமார் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டே வந்தார்.
இந்நிலையில் வரலட்சுமியின் தந்தை சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார். இதனையடுத்து, நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சம்மன் அனுப்பியதாக சில செய்திகள் தீயாக பரவின. அதன் காரணமாகதான் சரத்குமார் பாஜகவில் இணைந்தார் என்றும் வதந்திகள் கிளம்பியது.
இது தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,
நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட வேறு எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது.
உண்மையிலேயே நீங்கள் கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இங்கு இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என்னை பற்றிய அவதூறுகள்தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.