பொன்.மாணிக்கவேல் பதவி விவகாரம் – உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வக்கீல் யானை ராஜேந்திரன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

பொன் மாணிக்கவேல் மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நீடிப்பார் என்றும், சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவு பொன் மாணிக்கவேல் தலைமையின்கீழ் இயங்கும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகள், புதிய வழக்குகளை பொன் மாணிக்கவேல் விசாரிக்க வேண்டும். எந்த அதிகாரியிடமும் விசாரணை விவரங்களை அளிக்க வேண்டாம் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றதையடுத்து அன்று முதல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக அவரை மீண்டும் நியமித்து ஐகோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் அதில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று யானை ராஜேந்திரன் தரப்பில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools