தமிழக அரசின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் தனது பணிக்காலத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் திருடு போன ஆயிரக்கணக்கான சிலைகளை மீட்டார்.
குறிப்பாக ராஜராஜ சோழன் சிலையை மீட்டதும், சென்னையில் தொழில் அதிபர்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட சிலைகளை மீட்டதும் சாதனையாக கருதப்படுகிறது. அவரது நடவடிக்கைக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆன்மீக வாதிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதியுடன் பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவருக்கு பதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக அபய்குமார்சிங் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. மேலும் பொன்.மாணிக்கவேலின் சிறப்பான பணியை பாராட்டிய ஐகோர்ட்டு அவருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு பணி நீடிப்பு வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்.மாணிக்கவேல் பணி நீடிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த யானை ராஜேந்திரன் பதில் அளிக்குமாறு கூறி விசாரணையை ஜனவரி மாதத்துக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.