பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக 66 போலீஸார் முறையீடு!
தமிழகத்தில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் ஓய்வுபெறும் நேரத்தில், அவரை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததை எதிர்த்தும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பொன் மாணிக்கவேல் எந்த சிறப்பான வேலையும் செய்யவில்லை என்றும், அவர் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 2018ம் ஆண்டு நவம்பர் 30-ல் ஓய்வு பெற்ற பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும்? என்றும் தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
அப்போது இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், தமிழக காவல்துறையில் சிறப்பான அதிகாரிகள் இருக்கும்போது, இந்த வழக்கு ஏன் சிபிஐக்கு மாற்றப்பட்டது? என கேள்வி எழுப்பினர்.
இதற்கிடையே, சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதில், பொன் மாணிக்கவேல் தங்களது விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.