‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படுகிறது
மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.
இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர். பொன்னியின் செல்வன் 2 படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இப்படத்தின் டிரைலர் அடுத்த மாதம் (மார்ச்) 28-ந்தேதி டிரைலர் மற்றும் பாடலை சென்னையில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிட பரிசீலித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் மார்ச் 30 மற்றும் 31-ந்தேதிகளில் நடிகர் நடிகைகளை பல்வேறு நகரங்களுக்கு அழைத்து சென்று படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்யவும் ஏற்பாடுகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை ஓரிரு வாரங்களில் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.