X

‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட செட்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என தெரிகிறது. இதில் பல்வேறு நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முக்கியமான நடிகர்கள் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளனர். தாய்லாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளை படமாக்கி வந்தார் மணிரத்னம்.

தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பிலிருந்து கிளம்பி ‘பூமி’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஜெயம் ரவி. தாய்லாந்து படப்பிடிப்புக்குப் பிறகு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து சில காட்சிகளைப் படமாக்க இப்போதைக்கு முடிவு செய்துள்ளார்கள்.

ஜூன் மாதம் வரை ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின், விக்ரம் பிரபு, ரகுமான், ஜெயராம், கிஷோர், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கவுஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.