‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க தயாராகி வருகிறார் மணிரத்னம். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கவுள்ளது.
இந்த படத்தில் பார்த்திபன் நடிக்கவுள்ளதை தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தினார். அதற்கு பிறகு தனது ‘ஒத்த செருப்பு’ பட பணிகளில் தீவிரமானார். தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்திலிருந்து பார்த்திபன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்தபோது, ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதல்கட்ட பணிகளில் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் படப்பிடிப்பும் இருக்கிறது. இதன் இரண்டுக்கும் இடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக தேதிகளை ஒதுக்கி நடிக்க பார்த்திபனால் முடியாமல் போனது.
மேலும், படம் 2 பாகங்களாக உருவாக உள்ளதால் தொடர்ச்சியாக 6 மாதங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அவ்வளவு தேதிகள் ஒதுக்கவும் பார்த்திபனால் முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.