‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகர்களிடையே போட்டி இருந்தது உண்மை தான் – நடிகர் ஜெயம் ரவி
கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் ஜெயம் ரவி கலந்துக் கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்ததற்கும், மணிரத்னம் படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது, மற்ற படங்களுக்கும், மணிரத்னம் படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நானே தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மற்ற படங்களில் வசனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். மணிரத்னம் படத்தில் வசனத்தை விட, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றார்.
பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுடன் பிரபு, சரத்குமார், விக்ரம், கார்த்தி என பல கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள். உங்கள் இடையே போட்டி இருந்தததா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பிரபுவுடன் நான் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். என்னிடம் ஏதாவது தவறாக தெரிந்தால், ஒரு மூத்த நடிகர் என்ற முறையில் திருத்தங்கள் சொல்வார். அவர் மகனிடம் கூட அப்படி சொல்ல மாட்டார். என் மீது அவருக்கு பாசம் அதிகம். விக்ரம் பிரபுவிடம் ஏதாவது குறை தெரிந்தால் அதை நேரடியாக அவர் சொல்ல மாட்டார். என் மூலம் சொல்ல செய்வார். கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்தது உண்மை. அது ஆரோக்கியமான போட்டிதான் என்றார்.
மேலும் ராஜராஜ சோழனாக நடிக்க உங்களிடம் மணிரத்னம் சொன்ன முக்கிய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போன பிறகும் ராஜராஜ சோழனை மறந்து விடாதே. உன் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும் என்று மணிரத்னம் சொல்லியிருந்தார் என்றார்.