அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2019-20-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த வகுப்பு மாணவர்களுக்கும் வினாத்தாள் கட்டமைப்பு (புளூ பிரிண்ட்) இல்லாத நிலை இருக்கிறது. வினாத்தாள் கட்டமைப்பு இல்லை என்பதால் வினாக்கள் எந்த பாடத்தில் இருந்தும் எந்த வகையிலும் கேட்கப்படலாம்.
ஆனால் வினாத்தாள் வடிவமைப்பில் (பேட்டன்) மாற்றம் இருக்காது. மாதிரி வினாத்தாள் என்பது வினாத்தாள் வடிவமைப்பான பகுதி, பிரிவுகள், மதிப்பெண்கள் ஒதுக்கீடு பற்றி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிந்து கொள்வதற்காகவே தான். மாதிரி வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினா வகைகளே கேட்கப்பட வேண்டும் என கட்டாயம் இல்லை.
ஒவ்வொரு பகுதியிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் வினாக்கள், எந்தவொரு வடிவிலும் இருக்கும் என்பதனை அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உணர்ந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். வினாத்தாள் கட்டமைப்பு தேவையில்லை என்பது அரசின் கொள்கை முடிவாகும்.
எனவே மாதிரி வினாத்தாள்களில் உள்ளவாறு வினாக்கள் கேட்கப்படவில்லை என்று மாணவர்கள், ஆசிரியர்கள் உரிமைக்கோர இயலாது. வினாத்தாள் வடிவமைப்புக்கே மாதிரி வினாத்தாள் வெளியிடப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், புத்தகத்தின் உட்பகுதியில் இருந்தும், பாடம் சார்ந்தும் வினாக்கள் எப்படி வேண்டுமானாலும் பொதுத்தேர்வில் கேட்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.