Tamilசெய்திகள்

பொது சிவில் சட்டம் கண்டிப்பாக தேவை – நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பேட்டி

பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. பொது சிவில் சட்டம் நாட்டில் கண்டிப்பாக தேவை.

பா.ஜ.க. தலைவர்கள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பி.எஸ். தெரிவிப்பதாக கூறுகின்றனர். தேர்தல் காலங்களில் எங்களோடு இருந்தவர்களை நாங்கள் நினைத்துப் பார்ப்போம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால் ஓ.பி.எஸ். சொல்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க போவதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. ஆட்சி கலைப்பது தொடர்பான வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது. அவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்கு முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளில் இருந்து மகளிர் உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு அண்ணா பிறந்தநாளில் கொடுக்கப் போகிறோம் என சொல்லி உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகையை அனைத்து மகளிர்க்கும் கொடுக்க வேண்டும். பொது மக்கள் மகளிர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் பெயரளவில் தான் செயல்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றபின் இந்த திட்டம் நிறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.