பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை! – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொது போக்குவரத்து கிடையாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம்.
ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.
பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஸ்கள் இல்லாமல் ஆட்களை அழைத்து செல்லும் நிகழ்வுகளில், குடியிருப்பு நலச்சங்கங்கள், கட்டுமான சங்கங்கள் போன்றவை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
நகர பஸ்களில் டிக்கெட், பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகளுக்கு மாதாந்திர பாஸ்களை வழங்க வேண்டும். பஸ்கள், பாஸ் வழங்கும் இடங்களில் ‘கியூஆர் கோர்ட்’ பேனல்களை வைத்து அவற்றை வைத்து டிக்கெட், பாஸ்களை வழங்கலாம்.
இந்த வசதிகள் இல்லாத பயணிகளுக்கு மட்டும் டிக்கெட்களை வழங்க வேண்டும். பஸ் புறப்படும் முன்பும், வந்து சேர்ந்த பின்பும் சுத்தமாக கழுவப்பட வேண்டும்.
பயணிகள் பின்பக்க வாசல் மூலம் ஏறவும், முன்பக்க வாசல் மூலம் இறங்கவும் வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் பயணிகள் வசதிக்காக ‘சானிடைசர்’ வைக்கப்பட வேண்டும். ஏ.சி. எந்திரங்களை பஸ்களில் இயக்கக் கூடாது. எந்த இருக்கையில் பயணி உட்கார வேண்டும், எது காலியிடமாக வைக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பஸ் ஓட்டுனர், நடத்துனரின் உடல்வெப்பத்தை தினமும் சோதிக்க வேண்டும். முககவசம், கையுறையை அணிய வேண்டும். பஸ்சில் ஏறும்போது பயணிகளை முககவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.
‘லைன்’ பரிசோதனை ஆய்வாளர்கள், பஸ் நிறுத்தங்களில் அமர்த்தப்பட்டு, பயணிகள் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து பஸ்களில் ஏறுகிறார்களா? போதிய ‘சீட்’ வசதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். பயணிகள் கண்டிப்பாக வாய் மற்றும் மூக்கை முககவசம் அல்லது துணியால் மூடியிருக்க வேண்டும். ஒரு பஸ்சில் இருக்கைகள் இல்லாவிட்டால் பயணிகள் அடுத்த பஸ்சுக்கு காத்திருக்க வேண்டும். இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் யாரும் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பஸ் நிறுத்தங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பஸ் முனையம் மற்றும் நிறுத்தங்கள் ஒரு நாளைக்கு 2 முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களை பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.