X

பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன், 2 ஆயிரத்து 970 சிறப்பு பஸ்கள் என 2 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 7 ஆயிரத்து 154 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 2 நாட்களுக்கு 3 ஆயிரத்து 60 சிறப்பு பஸ்களும் என மொத்தமாக 10 ஆயிரத்து 214 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேற்படி சிறப்பு இயக்க தினங்களில் வருகிற 18-ந் தேதி சென்னையில் இருந்து புறப்பட உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தற்போதைய (நேற்றைய) நிலவரப்படி 16-ந் தேதிக்கான (இன்று) 30 ஆயிரத்து 630 முன்பதிவு இருக்கைகளில், ஆயிரத்து 22 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, 29 ஆயிரத்து 608 இருக்கைகள் காலியாக உள்ளன.

இதே போன்று, 17-ந் தேதிக்கான 31 ஆயிரத்து 308 முன்பதிவு இருக்கைகளில் 6 ஆயிரத்து 475 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. 24 ஆயிரத்து 833 இருக்கைகள் காலியாக உள்ளன. எனவே, 18-ந் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 16, 17-ந் தேதிகளில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.