Tamilசெய்திகள்

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் – கிரண்பேடி

கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் தினந்தோறும் 30 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாட்களை ஒப்பிடும்போது இது 2 மடங்கு அதிகம். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த மாதம் (ஜூலை) ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள். இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை.

இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் சில மாவட்டங்களில் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு அடைப்பை திரும்பப் பெறும்போது கொரோனாவின் அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தயவு செய்து கூட்டம் கூடுவதை தவிர்க்கவும். முக கவசம் அணிதல், சுகாதாரத்தை கடைபிடித்தல், சமூக இடைவெளியுடன் செயல்படுதல் என்ற 3 முறைகளையும் பின்பற்றவும்.

நம்மை நாம் பாதுகாப்பதன் வழியாக மற்றவர்களையும் பாதுகாக்க முடியும். வரும்முன் காப்பதே சிறந்தது. புதுச்சேரி குறைந்த மக்கள் தொகையை தான் கொண்டுள்ளது. நம்முடைய ஒருங்கிணைந்த முயற்சிகளால் நம்மால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த எங்களுக்கு (புதுச்சேரி நிர்வாகத்துக்கு) தயவு செய்து உதவுங்கள். கடற்கரை சாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் சிலர் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக இருக்கின்றனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *