பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையம் தொடக்கம் – 4077 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தகவல்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் (25.05.2021) அன்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்கான பொதுமக்கள் குறைகேட்பு சிறப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 04428339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோவில் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இதுவரை சிறப்பு மையம் தொடங்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து 4077 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் முழுமையாக நடவடிக்கை எடுத்து முடிக்கப்பட்ட மனுக்கள் 351, நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வரும் மனுக்கள் 3279, நிராகரிப்பட்ட மனுக்கள் 447. இக்குறைக் கேட்பு மையத்தில் கோவில்களின் திருப்பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய புகார்கள் அதிகம் வரப்பெற்றுள்ளன. மேலும், 1550 கோரிக்கைகளில் கோவில் பற்றிய தகவல்கள், திறந்திருக்கும் நேரம், இருப்பிடம், வழித்தடம், தங்கும் விடுதிகள் பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்து கேள்விகளுக்கும் நிர்வாகத்தின் சார்பில் பதில்கள் அளிக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.