பொதுத் தேர்வு நேரம் 3 மணி நேரமாக உயர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் முதலிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் தற்போது கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2-ந் தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந்தேதி முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்கிறது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 24-ந் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 4-ந் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14-ந் தேதியும் வெளியிடப்படும்.

இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவடையும்.

முதல் 15 நிமிடங்கள் மாணவர்கள் கேள்வித்தாளை படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மாணவர்கள் கேள்வித்தாளை நன்றாக படித்து பார்த்து விடை எழுத வேண்டும்.

இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத உள்ளனர். இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும், 11-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் எழுத உள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தேர்வு மையங்கள் அதிகப்படுத்தபட்டு 3 ஆயிரத்து 12 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news